அக்டோபர் 20ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராக உத்தரவு
புதுடெல்லிஇந்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்ற விசாரணையில் உள்ளது. வழக்கில் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும். இதற்காக ஆஜராகுமாறு ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், ஜெயலலிதா ஆஜராகவில்லை. பாதுகாப்பு காரணங்களால் நீதிமன்றத்தில் ஆஜராக தனக்கு விலக்கு அளித்து, எழுத்து மூலம் வாக்குமூலம் அளிக்க அனுமதிக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் கேள்வி&பதிலை பதிவு செய்ய வேண்டும் என்று கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இதை தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் கடந்த 5ம் தேதி விசாரித்தனர். தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென அப்போது உத்தரவிட்டனர். இந்நிலையில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வக்கீல் ஹரீஷ் சால்வே கூறுகையில், ‘தனி நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயலலிதா தயாராக உள்ளார். பாதுகாப்பு கருதி, வேறொரு கட்டிடத்தில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரினார்.
இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அக்டோபர் 20ம் தேதி, ஜெயலலிதா ஆஜராக வேண்டும். பாதுகாப்பு பிரச்னை காரணமாக, வேறொரு கட்டிடத்தில் விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தனி நீதிமன்ற நீதிபதி பரிசீலித்து முடிவெடுப்பார். ஜெயலலிதாவிடம் ஒரே நாளில் விசாரித்து முடிக்க வேண்டும். அவர் ஆஜராகும் போது கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

